எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர் காவலாளி அஜித்குமார்
காவலாளி அஜித்குமார் குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆறுதல் கூறினார்கள்.;
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோவில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் இறந்த அஜித்குமாருக்கு தாயார் மாலதி. தம்பி நவீன்குமார் ஆகியோர் உள்ளனர். இவர்கள் மதுரை மாவட்டம் சோழவந்தானில் வசித்து வந்தனர். அஜித்குமார் தந்தை பாலகுரு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.
அதன் பின்னர் தாயார் மாலதி, மகன்கள் அஜித்குமார், நவீன்குமார் ஆகிய 2 பேரையும் அழைத்து வந்து மடப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி தென்னை ஓலை முனையும் வேலை செய்து தனது மகன்களை காப்பாற்றி வந்துள்ளார். மேலும் 2 பேரையும் நல்ல முறையில் படிக்கவும் வைத்துள்ளார்.
இந்நிலையில் அஜித்குமார் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியில் சேர்ந்து 2 மாதங்கள் தான் ஆகிறது. இவரது தம்பி நவீன்குமார் ஐ.டி.ஐ. எலக்ட்ரிக்கல் படித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அஜித்குமாருக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று அஜித்குமார் குடும்பத்தினருக்கு பட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆறுதல் கூறினார்கள். திருப்புவனம் சண்டே திடலில் அதிமுக சார்பில் சிவகங்கை மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு அஜித்குமாரின் சாவுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.