தமிழ்நாட்டிற்கு பாஜக ஏதாவது சிறப்பு திட்டம் கொண்டுவந்துள்ளதா? - செந்தில்பாலாஜி கேள்வி
மெட்ரோ ரயில் திட்டம் கோவைக்கும் மதுரைக்கும் அவசியமானது என செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.;
கோவை,
கோவை-மதுரை மெட்ரோ திட்ட நிராகரிப்பை கண்டித்து கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது;
"கோவை-மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு அற்ப காரணம் காட்டி திட்டத்தை நிராகரித்திருப்பது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல். பாஜக ஆளும் மாநிலங்களில் ஐந்து மாதங்களுக்குள் ஒப்புதல் வழங்கப்படும் நிலையில், தமிழகத்திற்கு மட்டும் திட்ட அனுமதி மறுக்கப்படுவது அரசியல் நோக்கம். விரிவான அறிக்கையில் சந்தேகம் இருந்தால் 15 மாதங்கள் அவகாசம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டிற்கு பாஜக ஏதாவது சிறப்பு திட்டம் கொண்டுவந்துள்ளதா?
சென்னை மெட்ரோ திட்டம் போல கோவை-மதுரை திட்டங்களையும் மாநில அரசு சுமூகமாக செயல்படுத்தும் திறன் கொண்டுள்ளது. கோவையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. கோவையின் உண்மையான வளர்ச்சி திமுக ஆட்சிக்காலத்தில்தான் நடந்து வருகிறது மெட்ரோ ரயில் திட்டம் கோவைக்கும் மதுரைக்கும் அவசியமானது என்பதால், மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.