மயிலாடுதுறை அருகே பயங்கரம்: வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை.. காதல் விவகாரம் காரணமா..?
கொலையான வாலிபர் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.;
மயிலாடுதுறை அருகே அடியமங்கலத்தைச் சேர்ந்தவர் குமார், இவரது மகன் வைரமுத்து(வயது 26). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். தனது கிராமத்தை அவர் நெருங்கியபோது வைரமுத்துவை வழி மறித்த சிலர் தாங்கள் வைத்து இருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த வைரமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீஸ் விசாரணையில், கொலையான வைரமுத்து அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண், தான் காதலிக்கும் வைரமுத்து என்பவருடன் மட்டுமே வாழ விருப்பம் என்றும், அவரை பதிவு திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்துள்ளார்.
இதன் காரணமாக அந்த பெண்ணின் உடன்பிறந்த சகோதரர்களுக்கும், வைரமுத்துவுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பெண்ணின் சகோதரர்களும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து வைரமுத்துவை நேற்று முன்தினம் இரவு அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது தெரிய வந்தது.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக இறந்த வைரமுத்துவின் தாயார் ராஜலட்சுமி அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார், வைரமுத்து காதலித்த பெண்ணின் சகோதரர்களான குணால், குகன்(24), சித்தப்பா பாஸ்கர்(42), உறவினர்கள் சுபாஷ்(26), கவியரசன்(23), அன்புநிதி(19) ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் குணாலை தவிர மற்ற 5 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவான குணாலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இருதரப்பும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றபோதிலும், பெண்ணின் தாயார் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த கொலை சம்பவத்துக்கு தூண்டுதலாக இருந்த அந்த பெண்ணின் தாயார் ஆணவ படுகொலைக்கு காரணமாக இருந்ததாகவும், அவர் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், படுகொலை செய்யப்பட்ட வைரமுத்துவின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் கொலை செய்யப்பட்ட வைரமுத்துவின் காதலியும் கலந்து கொண்டார். காலை 11.30 மணிக்கு தொடங்கிய சாலைமறியல் போராட்டமானது மதியம் 3 மணி வரை நடந்தது. இதனால் நகரில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் வைரமுத்துவின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் நேற்று இரவு வரையில் வைரமுத்துவின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை பிணவறையில் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் வைக்கப்பட்டிருந்தது.