மெரினாவில், கார் மோதியதில் ஐஸ் கிரீம் வியாபாரி பலி
மெரினா கலங்கரை விளக்கம் அருகே சாலையை கடக்க முயன்ற போது கார் மோதியதில் ஐஸ்கிரீம் வியாபாரி பலியானார்.;
சென்னை,
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). இவர் சென்னை மெரினாவில் ஐஸ் கிரீம் வியாபாரம் செய்து வந்தார். இதற்காக அவர், அயனாவரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு ரமேஷ், மெரினா கலங்கரை விளக்கம் அருகே உள்ள காமராஜர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையை கடக்க முயன்றபோது, அங்கு வந்த ஒரு கார் திடீரென ரமேஷ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், ரத்த வெள்ளத்தில் சாலையில் துடித்து கொண்டிருந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் ரமேசை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த சாம் சிவானந்தம் (25) என்பவரை கைது செய்தனர்.