பொங்கல் கரும்புக்கு வெறும் ரூ.15 தான் விலையா? - அன்புமணி கண்டனம்
செங்கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து வழங்கப்படும் பன்னீர் கரும்பை நடப்பாண்டிலும் உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், இடைத்தரகர்களிடமிருந்து வாங்குவதற்கான நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கரும்பு கொள்முதல் செய்வதில் கூட திமுக அரசு உழவர்களை சுரண்டுவது கண்டிக்கத்தக்கது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பை திமுக அரசு வெளியிடுவதற்கு முன்பாகவே பொங்கல் கரும்பை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்; ஒரு கரும்புக்கு ரூ.50 விலை வழங்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதன் பின் பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்த தமிழக அரசு, கரும்பு என்ன விலைக்கு, எவ்வாறு கொள்முதல் செய்யப்படும்? என்பது குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.
பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வரும் 8-ஆம் தேதி முதல் வழங்கப்படவிருக்கும் நிலையில், அதற்கு இன்னும் இரு நாள்கள் மட்டுமே உள்ளன. அரசுத் தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வழங்கப்படாத நிலையில், அதைப் பயன்படுத்திக் கொண்டு செங்கரும்புகளை இடைத் தரகர்கள் வாங்கிக் குவிக்கின்றனர். தமிழக அரசிடமிருந்து நேரடி கொள்முதல் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், வேறு வழியின்றி இடைத்தரகர்களிடம் கரும்புகளை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு இந்த முறை ஒரு கரும்புக்கு ரூ.35 வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், உழவர்களுக்கு ஒரு கரும்புக்கு ரூ.15 மட்டுமே வழங்கப்படும் என்று இடைத்தரகர்கள் கூறியுள்ளனர். இதில் கரும்பு பறிக்கும் செலவு, கட்டும் செலவு, ஏற்றுக்கூலி ஆகியவை போக ஒரு கரும்புக்கு ரூ.12 மட்டுமே உழவர்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் ஏக்கருக்கு ரூ.2.15 லட்சம் மட்டுமே உழவர்களுக்கு கிடைக்கும். பன்னீர் கரும்பு சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.2.5 லட்சம் செலவாகும் நிலையில், இவ்வளவு குறைந்த விலைக்கு கரும்பை விற்பனை செய்தால் உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.
பொங்கல் கரும்பை கொள்முதல் செய்வதில் கூட கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் செய்ய ஆட்சியாளர்கள் துடிப்பது தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும். இந்த அணுகுமுறையை கைவிட்டு நடப்பாண்டிலாவது கரும்பை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.