அதிமுக கொண்டு வந்த திட்டத்தை ஸ்டாலின் அரசு மாற்றுவது சரியானது அல்ல - எடப்பாடி பழனிசாமி

அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update:2025-07-12 18:21 IST

கடலூர்,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை கடலூரில் "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" பரப்புரை பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், புதுச்சேரி பூரனாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோர் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுநல சங்கங்களை சேர்ந்தவர்களை பகலில் சந்தித்து அவர்களின் கோர்க்கைகளை கேட்டறிந்தார்.

அவர்களிடம் பேசிய இபிஎஸ், ''நான் ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டு காலம் இக்கட்டானது வறட்சி புயல் கொரோனா உள்ளிட்ட மூன்று இக்கட்டான சூழ்நிலைகளும் சமாளித்து அரசுக்கு வரக்கூடிய வருவாய் வைத்து ஒரு சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம். நான் ஆட்சி செய்த போது பிரச்சினைகளை சந்தித்த போதும் மக்கள் குறையில்லாமல் வாழ்ந்தார்கள்.

இந்த ஆட்சியில் மக்கள் மற்றும் வியாபாரிகள் சிறுகுறு தொழில் புரிபவர்கள் மற்றும் பல அமைப்பு சேர்ந்தவர்களுக்கு நிகழும் சிக்கல்களை, கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள். இவற்றை எப்படி சரி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறீர்கள். குறிப்பாக பொது நல சங்கத்துடைய தலைவர் சேகர் சிறப்பான உரை ஆற்றினீர்கல். நீங்கள் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக நல்ல எதிர்காலம் இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் இருக்கும் போது எம் சி சம்பத் மூலம் ஆட்சியர் அலுவலகம் வர இருந்த இடம் கையகப்படுத்தப்பட்டு பேருந்து நிலையம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் நகரின் மையப்பகுதியில் இருக்க வேண்டிய பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளது. மக்களுக்காக ஆட்சியாளர்கள் இருக்க வேண்டுமே தவிர, ஆட்சியாளர்களுக்காக மக்கள் இருக்கக் கூடாது.

மக்கள் விரும்பக்கூடிய இடத்தில் பேருந்து நிலையத்தை அமைக்காமல் மாற்று இடத்தில் அமைப்பது கண்டிக்கத்தக்கது. அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அந்த திட்டத்தை ஸ்டாலின் அரசு மாற்றுவது சரியானது அல்ல. எனவே வருகிற 15ஆம் தேதி அந்த பேருந்து நிலையம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். என்றென்றும் மக்களுடன் அதிமுக துணை நிற்கும்.

அடிப்படையில் நான் ஒரு விவசாயி இன்றும் நான் விவசாயம் தான் செய்து கொண்டிருக்கிறேன். விவசாயம் செழித்தால் எல்லா தொழிலும் சிறப்பாக நடக்கும். கடலூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக இருப்பது வேளாண் தொழில். அடிக்கடி கனமழை வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதி கடலூர் பகுதி. இங்கு பலா மரங்கள், முந்திரி மரங்கள் சாய்ந்தது, அவற்றையெல்லாம் அரசு வந்து வெட்டி அகற்றி சரி செய்தது. பல வழியிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

கொரோனா காலத்தில் தொழில் புரிபவர்களை தலைமைச் செயலகம் அழைத்து என்னென்ன தொழில் முன்னேற்றம் காண வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கருத்தை கேட்டறிந்து மேம்படுத்தப்பட்டது. கொரோனாவின் 11 மாத காலத்தில் அரசுக்கு எந்தவிதமான வருமானமும் இல்லாமல் இருந்தது. அரசு பணமான 40 ஆயிரம் கோடியில் செலவு செய்தோம்.

நான் முதல்-அமைச்சராக இருந்த போதும் அம்மா முதல்-அமைச்சராக இருந்த போதும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டது. இன்று சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருந்தால், தொழிற்சாலைகள் அதிக அளவில் வந்திருக்கிறோம். ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் காலத்தில் எங்கு பார்த்தாலும் போதை. இவையெல்லாம் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக அமைந்து விடும். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் மட்டுமே மாநிலம் வளர்ச்சி அடையும்.

அதை கடந்த ஆட்சி காலத்தில் நாங்கள் செய்தோம். எல்லா தரப்பு மக்களும் திருப்தி தரும் ஆட்சியை வழங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து அமைப்புகளும் அதிமுகவிற்கு ஆதரவு தர வேண்டும்.

கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக திட்ட அறிக்கையை தயார் செய்து பாரத பிரதமரிடம் கொடுத்து, அதற்குண்டான ஏற்பாடுகளை அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது. தற்போது அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஆனால் இப்போது இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் அந்த திட்டத்தை என் ஆட்சி காலத்திற்கு கொண்டு வந்தது என்பதை சொல்லுவதற்கு கூட தயாராக இல்லை.

பாசனத்திற்கு விவசாயிகளுக்கு நீர் தேவை மக்களுக்கு குடிப்பதற்கு நல்ல நீர் தேவை என்பதை கருத்தில் கொண்டு கடந்த கால ஆட்சி காலத்தில் அதிமுக அரசு செயல்பட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தடை செய்ததும் அதிமுக அரசுதான் ஆனால் அதற்கு உண்டான ஒத்துழைப்பு மக்களிடம் கிடைக்கவில்லை அதே நேரத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் மட்டும் தான் எந்த ஒரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த முடியும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து அமைப்பினரும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டு உரையை முடித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்