கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு

10 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கபட்டது.;

Update:2025-04-22 12:22 IST

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன், கன்னுக்குட்டி ஆகியோருக்கு  சென்னை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த ஆண்டு ஜுன் 19ம் தேதி விஷ சாராயம் குடித்த 67 பேர் மரணம் அடைந்தனர். இந்த வழக்கில் விஷ சாராயம் விற்பனை செய்வது, கடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 21 பேர் கைது செய்யபட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் தாமோதரன் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்  செய்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கபட்டது.

மனுதாரர்கள் தரப்பில், 10 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கபட்டது. இதையடுத்து தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி உத்தரவிட்டார். மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்று அவர்களுக்கு நிபந்தனை விதித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்