மேட்ரிமோனியில் வரன் தேடும் பெண்களை குறிவைத்து மோசடி... 11-வது திருமணத்திற்கு தயாரான ‘கல்யாணராமன்’ அதிரடி கைது
கழிவறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்து சூர்யாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.;
சென்னை,
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர், திருமணத்திற்கு வரன் தேடுவதற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் தனது சுயவிவரங்களை பதிவேற்றம் செய்திருந்தார். அதனை பார்த்துவிட்டு சூர்யா என்ற நபர், இளம்பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்து, கடந்த சில மாதங்களாக காதலித்தும் வந்துள்ளனர். அப்படி பேசிப் பழகும்போது, திருமணத்திற்குப் பிறகு சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என இளம்பெண்ணிடம் சூர்யா கூறியுள்ளார். தன்னிடம் ஏற்கனவே கொஞ்சம் பணம் இருப்பதாகவும், மேற்கொண்டு பணம் கிடைத்தால் புதிய வீடு வாங்கி, திருமணத்திற்குப் பின்னர் அங்கு குடியேறி விடலாம் என இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய அந்த பெண், சுமார் 8 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 9 சவரன் தங்க நகைகளை சூர்யாவிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பின் சூர்யாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்திருக்கிறது. அந்த பெண்ணை அவர் கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்கத் தொடங்கியுள்ளார். இது குறித்து அந்த பெண் கேட்டபோது, அவரை மிரட்டும் தொனியில் சூர்யா பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த இளம்பெண், இது குறித்து அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சூர்யாவை தேடியுள்ளனர். இதனையறிந்து சூர்யா சென்னையில் இருந்து தப்பி திருநெல்வேலியில் தலைமறைவானார். பின்னர் ஒருவழியாக போலீசார் அவரை மடக்கிப் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் சூர்யாவின் ‘கல்யாணராமன்’ அவதாரம் வெட்டவெளிச்சமானது. ஆன்லைன் மேட்ரிமோனி மூலம் வரன் தேடும் பெண்களை குறிவைத்து மோசடி செய்வதே அவரது வழக்கமாக இருந்துள்ளது. தன்னை அரசு அதிகாரி என்றும், திருமணத்திற்குப் பிறகு வீடு, கார் உள்ளிட்டவற்றை வாங்க வேண்டும் என்றும் கூறி ஆசைவார்த்தைகளை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய சூர்யா, அவர்களிடம் இருந்து பணம், நகைகளை பெற்றுக் கொண்டு தலைமறைவாகிவிடுவார்.
பின்னர் அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இது குறித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் சுமார் 10 பெண்கள் அளித்த புகாரின் பேரில் சூர்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர், 11-வது முறையாக கல்யாண மோசடி லீலையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் போலீஸ் விசாரணையின்போது கழிவறைக்குச் சென்ற சூர்யா, அங்கு வழுக்கி விழுந்ததாகவும், இதனால் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர். அவரை மாவுக்கட்டுடன் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிபதியின் உத்தரவின்பேரில் சூர்யாவை சிறையில் அடைத்தனர்.