கன்னியாகுமரி: ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கு - பொதுமக்கள் அச்சம்

ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.;

Update:2025-08-03 20:06 IST

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள புத்தன்கடை புதுக்கோடு பகுதியை சேர்ந்தவர் நெல்சன் (68 வயது), கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டின் பின்புறம் ஓலைக்கொட்டகை அமைத்து 3 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் இரவு ஆடுகளுக்கு உணவு கொடுத்து விட்டு ஓலை கொட்டகையில் கட்டி விடுவது வழக்கம். இதுபோல் நேற்று இரவும் ஆடுகளை கட்டி வைத்துவிட்டு தூங்க சென்றார்.

இந்த நிலையில் இன்று காலையில் எழுந்து ஆடுகளுக்கு உணவளிக்க கொட்டகைக்கு வந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு கட்டியிருந்த 3 ஆடுகளும் இறந்து கிடந்தன. அவற்றின் வயிற்றில் ஏதோ மர்ம விலங்கு கடித்ததற்கான பெரிய காயங்கள் இருந்தன. நெல்சனின் வீட்டின் அருகே சிறிய மலைக்குன்று உள்ளது. அங்கிருந்து இறங்கி வந்த ஏதோ மர்ம விலங்கு ஆடுகளை கடித்து கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். உடனே வன அலுவலர் பாலமோகன் தலைமையிலான ஊழியர்கள் ராஜகோபால், ஹரிஹரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது ஓலை கொட்டகையின் அருகே குவித்து வைத்திருந்த மணலில் மர்ம விலங்கின் கால்தடம் பதிந்து இருந்ததை கண்டு, அதனை பதிவு செய்தனர். இது செந்நாய் அல்லது மரநாயின் கால் தடமாக இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மக்கள் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் மர்ம விலங்கு புகுந்து 3 ஆடுகளை கடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே மர்ம விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்