மேகதாது அணையை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கிய கர்நாடக அரசு - டி.டி.வி. தினகரன் கண்டனம்

டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் கர்நாடகத்தின் செயல்பாடுகளை தி.மு.க. அரசு ஆதரிக்கிறதா என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update:2025-07-03 05:04 IST

கோப்புப்படம் 

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கிவிட்டதாக கர்நாடக மாநில துணை முதல்-மந்திரியும், நீர்வளத்துறை அமைச்சருமான சிவக்குமார் தெரிவித்திருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எங்களின் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் காவிரியின் குறுக்கே அணை கட்ட முடியாது என தி.மு.க. அரசு வீரவசனம் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மறுபுறம் மேகதாது அணை கட்டுமானப் பணிகளுக்கான நிலம் கணக்கீட்டு பணிகளை நிறைவு செய்து, அவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு தொடங்கியிருக்கிறது.

கடைமடை பாசன மாநிலங்களின் அனுமதியின்றி எந்த ஒரு இடத்திலும் புதிய அணையை கட்ட முடியாது என சுப்ரீம் கோர்ட்டும், காவிரி நடுவர் மன்றமும் தெளிவாக அறிவுறுத்திய பின்னரும் சட்டவிரோதமாக மேகதாது அணையை கட்டியேத் திருவோம் என கர்நாடக அரசு பிடிவாதம் பிடிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஒவ்வொரு பாசன ஆண்டிலும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மிக முக்கியமான காலகட்டத்தில் தமிழகத்திற்கு சட்டப்படி வழங்க வேண்டிய நீரை கர்நாடகத்திடம் இருந்து கேட்டுப்பெற முடியாத தி.மு.க. அரசு, இதற்கு மேலும் கூட்டணி தர்மத்திற்காக மவுனம் காத்தால், அது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி ஆகும்.

கர்நாடக மாநில முதல்-மந்திரியின் பதவியேற்பு விழாவுக்கும், கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஓடோடிச் செல்லும் முதல்-அமைச்சர், தமிழகத்திற்கு வருகை தரும் கர்நாடக மாநில துணை முதல்-மந்திரியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் முதல்-அமைச்சர், தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி விவகாரத்திற்காக எத்தனை முறை சந்தித்திருக்கிறார்? என்ற கேள்வி விவசாயிகள் ஒவ்வொருவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

எனவே, காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சியை சட்டரீதியாக எதிர்கொண்டு முறியடிப்பதோடு, அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்