கரூர் சம்பவம் எதிரொலி: தொண்டர் பாதுகாப்பு படை அமைக்க விஜய் ஆலோசனை
விரைவில் 2-ம் கட்ட தலைவர்கள் பட்டியலை விஜய் வெளியிட இருக்கிறார்.;
சென்னை,
கரூர் சம்பவத்திற்கு பிறகு, தவெக தலைவர் விஜய் கட்சியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளார். பெரும் கூட்டங்களை கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் மற்ற கட்சிகளை போல் தொண்டர் படையை உருவாக்க அவர் யோசித்து வருகிறார். திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளில் ஏற்கனவே தொண்டர் படை இருக்கிறது.
இந்த தொண்டர் படையின் பணி என்பது, எங்கெல்லாம் கட்சி சார்பில் கூட்டமோ, பேரணியோ நடக்கிறதோ அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது தான். அந்த வரிசையில், தவெகவும் தற்போது தொண்டர் படை அமைத்து, தொண்டர் படையில் இருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில், தற்போதைய சூழ்நிலையில் வழக்கு பிரச்சினை காரணமாக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மாநில நிர்வாகிகள் கட்சி நடவடிக்கையில் ஈடுபடாமல் இருக்கிறார்கள்.
எனவே, கட்சிக்கு அவசர, அவசரமாக 2-ம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டிய சூழ்நிலைக்கு விஜய் தள்ளப்பட்டு உள்ளார். இதற்காக தவெகவில் இணைந்த மற்ற கட்சிகளை சேர்ந்த, அரசியல் அனுபவம் கொண்டவர்களை 2-ம் கட்ட தலைவர்களாக நியமிக்க உள்ளார். இதற்கான பட்டியலை விஜய் தயாரித்து வருகிறார். விரைவில் 2-ம் கட்ட தலைவர்கள் பட்டியலை விஜய் வெளியிட இருக்கிறார்.
அந்த பட்டியல் வெளியான பிறகு 2-ம் கட்ட தலைவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தமிழகம் முழுவதும் சென்று தவெகவினருக்கு அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துதல், அரசியல் செயல்பாடுகளை எதிர்கொள்ளுதல், தேர்தல் பணியாற்றுதல் குறித்து பயிற்சி அளிப்பார்கள். இதனைத்தொடர்ந்து, தொண்டர் படை குறித்த அறிவிப்பும், அதற்கான பயிலரங்கம் எங்கெங்கு நடக்கும் என்பது குறித்த தகவலும் வெளியிடப்பட இருக்கிறது.