கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி; உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Update:2025-09-28 07:42 IST
Live Updates - Page 2
2025-09-28 02:25 GMT

கரூர் கூட்ட நெரிசல்: 25 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கரூர் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் இதுவரை 25 பேரின் உடல்கள் பிரேத பரிசோதானைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

2025-09-28 02:12 GMT

கரூர்  கூட்ட நெரிசல்

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வாரம் தோறும் சனிக்கிழமையன்று பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் அவர் நேற்று நாமக்கல், கரூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி சென்றார். திருச்சியில் இருந்து பிரசார பஸ்சில் நாமக்கல் சென்றார். நாமக்கல்லில் பிரசார இடத்திற்கு விஜய் காலை 8.45 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மதியம் 2.30 மணிக்கு பிரசார இடத்திற்கு சென்றார்.

அங்கு பிரசாரத்தை முடித்துக்கொண்டு விஜய் கரூர் புறப்பட்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று பகல் 12 மணியளவில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை காண காலை முதலே பொதுமக்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர்.

12 மணிக்கு பிரசாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தவெக தலைவர் விஜய் இரவு 7 மணியளவில் கரூரில் பிரசாரம் நடைபெற்ற இடத்திற்கு வந்தார். பிரசார கூட்டத்தில் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது 7.30 மணியளவில் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி பலரும் மயக்கமடைந்தனர். மயக்கமடைந்தவர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்படனர். அங்கு அனைவரும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டனர். ஆனாலும், கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். மேலும், 51 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில் சம்பவம் குறித்து அறிந்த உடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவே கரூர் புறப்பட்டு சென்றார்.

கரூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்ற முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

பின்னர், கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரின் உடல்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூரில் இருந்து இன்று காலை சென்னை புறப்பட்டு சென்றார். அதேவேளை, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவருபவர்களின் உடல்நிலையை மருத்துவமனையில் இருந்து அமைச்சர்கள் கண்காணித்து வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்