கிட்னி விற்பனை விவகாரம் - சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
'கிட்னி விற்பனை விவகாரத்தில் இதுவரை ஏன் குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை?,' என்று கேள்வி எழுப்பினர்;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நலமனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கிட்னி விற்பனை முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினரின் தொடர்பு உள்ளதால் இந்த வழக்கை மாநில போலீசார் விசாரித்தால் நேர்மையாக இருக்காது. எனவே, இந்த வழக்கின் விசாரணையை, சிபிஐ நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கிட்னி விற்பனை விவகாரத்தில் இதுவரை ஏன் குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை?,' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, புகார் அளித்தால் மட்டுமே குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், 'பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது தெரிந்தபிறகு வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு அதிருப்தியளிக்கிறது எனத்தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவில், நீலகிரி எஸ்பி நிஷா, திருநெல்வேலி எஸ்பி சிலம்பரசன், கோவை எஸ்பி கார்த்திகேயன், மதுரை எஸ்பி அரவிந்த் ஆகியோர் இடம்பெறுவார்கள். இக்குழு நடத்தும் விசாரணை ஐகோர்ட் மதுரைக் கிளையால் நேரடியாக கண்காணிக்கப்படும். முதற்கட்ட விசாரணை அறிக்கையை வரும் செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.