நெல்லை மாவட்டத்திற்கு 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
நெல்லை,
பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு வரும் 11.04.2025 அன்று நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பங்குனி உத்திர திருநாள் (பங்குனி -28) 11.04.2025 வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அரசு பொதுத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் அறிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த உள்ளுர் விடுமுறையானது பொருந்தாது எனவும். மேற்படி 11.04.2025 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act-1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (26.04.2025) 4-வது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அச்சமயம் கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ, மாணவியருக்கு இவ்வேலை நாள் பொருந்தாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.