அநீதி ஆட்சியாளர்களை விரட்டுவதற்கான துணிச்சலை வீரமங்கை வழங்கட்டும்: அன்புமணி புகழாரம்
அநீதியான ஆட்சியை எவ்வாறு வீழ்த்த வேண்டும் என்பதற்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை சிறந்த பாடம் என அன்புமணி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் வேலுநாச்சியாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த நிலையில், வேலுநாச்சியாருக்கு புகழாரம் சூட்டி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் கூறப்பட்டு இருப்பதாவது;
”இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீரமங்கையை வணங்கி மகிழ்கிறேன். வீரம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் வீரமங்கை வேலுநாச்சியார். ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் சிவகங்கை சீமையையும், கணவர் முத்து வடுகநாதரையும் வீழ்த்திய பிறகு பல பகுதிகளுக்கு சென்று ஹைதர் அலியின் படை உதவி பெற்று, மருது சகோதரர்களின் துணையுடன் 1780-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு சிவகங்கை சீமையை கைப்பற்றினார். தமது ஆட்சிக் காலத்தில் சிவகங்கை மக்களுக்கு பொற்கால ஆட்சி வழங்கினார்.
அநீதியான ஆட்சியை எவ்வாறு வீழ்த்த வேண்டும் என்பதற்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை சிறந்த பாடம். ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்துவதற்காக பயன்படுத்திய துணிச்சலையும், வீரத்தையும் தமிழ்நாட்டு மக்களுக்கு வீரமங்கை வழங்கட்டும்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.