அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் - ராமதாஸ்
9 ஆண்டுகளாக பழைய ஓய்வூதியம் கோரி அரசு ஊழியர்கள் போராட்டங்கள் நடத்தி வருவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
கடந்த 1.4.2003 முதல் அரசு மற்றும் அரசு ஊழியர்கள் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. அதேசமயம் இதனை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் வருகிற 6-ஆம் தேதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதனிடையே ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு தமிழக அரசிடம் இறுதி அறிக்கை அளித்துள்ளது. அதேசமயம் அரசு ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் நேற்று காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ உள்ளிட்ட போராட்ட கூட்டமைப்புகளின் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கி 9 ஆண்டுகளாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் அரசு ஊழியர்கள் ஏற்கத்தக்க வகையிலான அறிவிப்பினை முதல்-அமைச்சர் இன்று வெளியிடுவார் என்று அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். எனவே இனிமேல் ஓய்வுபெற உள்ள அரசு ஊழியர்களுக்கும், ஏற்கனவே பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்றுள்ள 48 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கும் முழு திருப்தி ஏற்படும் வகையிலான அறிவிப்பினை முதல்-அமைச்சர் வெளியிடுவார் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பதை போல, நானும் எதிர்பார்க்கிறேன்.
எனவே இந்த 2026 புதிய புத்தாண்டில் அரசு ஊழியர்கள் மகிழத்தக்க வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர், அவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.