ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பா? - செங்கோட்டையன் விளக்கம்

சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.;

Update:2025-09-26 09:57 IST

ஈரோடு,

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவிடுத்தார். இதைத்தொடர்ந்து அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள தன் இல்லத்தில், செங்கோட்டையன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, தினகரனின் அமமுக, மாவட்டச் செயலாளர்கள் சிலரிடமும் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த சூழலில், நேற்று முன்தினம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. ஆனால் இதை செங்கோட்டையன் மறுத்தார். வதந்தி பரப்பப்படுவதாக அவர் விளக்கம் அளித்திருந்தார்.

இதனிடையே, செங்கோட்டையன் நேற்று பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசியதாகவும், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் பேசிக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதையும் செங்கோட்டையன் மறுத்துள்ளார். இந்த நிலையில், ஈரோட்டில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

”சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை. நேற்று முன் தினம் நான் தெளிவான விளக்கம் கொடுத்துவிட்டேன். எனக்கு அவப்பெயர் வரவேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு சிலர் வதந்தி பரப்புகின்றனர். இது எனக்கு வேதனையை ஏற்படுத்துகிறது.

எனது நோக்கம், இயக்கம் வலுப்பெற வேண்டும், அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும். கோடிக்கணக்கான தொண்டர்களின் கனவு நிறைவேற வேண்டும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காகவே நான் பேசி வருகிறேன். அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்