உயர்நிலைப்பள்ளியில் ரூ.5.96 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு
ஜமாலியா பகுதியில் ரூ.9.64 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.;
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-76, குயப்பேட்டை, படவட்டம்மன் கோவில் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியில் ரூ.5.96 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் பள்ளிக் கட்டடத்தை இன்று (24.10.2025) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, அங்கு பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர், இப்பள்ளியில் பயிலும் 354 மாணவர்களுக்கு புத்தகப்பை, வாட்டர் பாட்டில், நோட்டுப் புத்தகம் மற்றும் பேனா உள்ளிட்ட தொகுப்பினை வழங்கினார். மேலும் இப்பள்ளியில் பணிபுரியும் 28 ஆசிரியர்கள் மற்றும் 10 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் உள்ளிட்ட 38 நபர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி பாராட்டினார்.
இந்த பள்ளிக் கட்டடம் 1473 ச.மீ. பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 6 வகுப்பறைகளும், முதல் தளத்தில் 7 வகுப்பறைகளும், இரண்டாவது தளத்தில் அறிவியல், இயற்பியல் ஆய்வகங்கள், நூலகம் மற்றும் கலையரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் 354 மாணவர்கள் பயன்பெறுவர்.
இந்நிகழ்வில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் பேசும்போது தெரிவித்ததாவது:
பெருநகர சென்னை மாநகராட்சியில் 417 சென்னை பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னை பள்ளிகளில் 75 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வந்த நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சென்னை மாநகர மேயராக இருந்த போது பல்வேறு அடிப்படை உட்கட்டமைப்புகளை உருவாக்கி, மாணவர்களின் எண்ணிக்கையினை ஒரு லட்சத்திற்கு உயர்த்தினார்.
தற்போது, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி கல்விக்கான பல்வேறு திட்டங்களால் சென்னை பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், பள்ளியின் உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேலும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் காரணமாக, தற்போது 1.17 லட்சம் மாணவர்கள் சென்னை பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் அனைத்து கல்வித் திட்டங்களையும், உதவிகளையும் மாணவ, மாணவியர் நன்கு பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனப் பேசினார்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பேசும்போது, “மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் கல்விக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மாநகராட்சியில் கட்டப்படும் பள்ளிக் கட்டடங்கள் தனியாருக்கு நிகராகவும், அதை விட அதிக வசதிகளை கொண்டதாகவும், அழகிய வடிவமைப்புடனும் கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரித்து, கல்விக்கான சீர்மிகு திட்டங்களைப் பயன்படுத்தி அவர்கள் உயர்வான கல்வியைப் பெற முடிகிறது” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர், வார்டு-74, பெரம்பூர் நெடுஞ்சாலை, ஜமாலியா பகுதியில் மாநகராட்சியின் மூலதன நிதியில் ரூ.9.64 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
இந்த வளாகத்தில் ஏற்கனவே பழுதடைந்த நிலையில் இருந்த கட்டடத்தினை இடித்து அகற்றிவிட்டு, புதியதாக வணிக வளாகம் 2,371 ச.மீ. பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் 11 கடைகள் கட்டப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி (திரு.வி.க.நகர்), ஆ.வெற்றி அழகன் (வில்லிவாக்கம்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர்), மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், நிலைக்குழுத் தலைவர்கள் .த.விசுவநாதன் (கல்வி), டாக்டர் கோ. சாந்தகுமாரி (பொதுசுகாதாரம்), மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் எஸ். தமிழ்செல்வி உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.