ராயபுரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் குறித்து மேயர் பிரியா ஆய்வு செய்தார்.;

Update:2025-11-12 17:39 IST

சென்னை,

சென்னை துறைமுகம் மற்றும் ராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, வடசென்னை பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ராயபுரம் மண்டலம், வார்டு-57க்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை, வ.உ.சி. தெருவில் ரூ.8.55 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதியதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூட கட்டுமானப் பணியினை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, பணியினை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், வார்டு-54க்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை, சென்னை உயர்நிலைப்பள்ளியில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியினை விரைந்து முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், அப்பள்ளியின் வகுப்பறை, சமையற்கூடம் ஆகிய பகுதிகளை அமைச்சருடன், மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்து, முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் குறித்து சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை தரமாகவும், சுவையாகவும் தயார் செய்து குறித்த நேரத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்கிட ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் சி.எம்.டி.ஏ. சார்பில் வால்டாக்ஸ் சாலை, அண்ணா பிள்ளை தெருவில் கட்டப்பட்டு வரும் "ஒருங்கிணைந்த வளாகத்திலுள்ள" புதிய சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் ராயபுரம் சட்டமன்றத் தொகுதி, மூலகொத்தளத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் மேயர் பிரியா செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து கல்வி மற்றும் மருத்துவத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அதற்கிணங்க, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஒவ்வொரு பள்ளிக் கட்டிடங்களையும் மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மாநகராட்சியின் சார்பாக, ஒவ்வொரு நிதிநிலையின் அறிக்கையிலும் அறிவிக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் பள்ளிக் கட்டிடங்கள் மேம்படுத்தப்பட்டு, பள்ளிகளில் கல்வித் தரமும் உயர்த்தப்பட்டு வருகிறது.

நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சிக்குட்பட்ட சமுதாய நலக்கூடங்களை மேம்படுத்திட பல்வேறு கோரிக்கைகளை அளித்தனர். அதனடிப்படையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒவ்வொரு சமுதாய நலக்கூடத்தையும் ஆய்வு செய்து, புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. தற்போது, துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சமுதாய நலக்கூடத்தின் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இப்பணி நடைபெற்று வரும் பகுதி துறைமுகத்திற்குட்பட்ட பகுதியாகும். இதற்கு முன்பு இந்தப் பகுதியில் நாடகக் கொட்டாய் இருந்தது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் காலத்திலிருந்தே, இதற்கு முன்பும் பல்வேறு நாடகக் கலைஞர்கள் இந்தப் பகுதியில் நாடகக் கொட்டாய் அமைத்து நாடகங்களை நடத்தி வந்தனர்.

அந்த வகையில், இந்தப் பகுதியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கண்டறிந்து, பல்வேறு சட்டப்போராட்டங்களை மேற்கொண்டு, இப்போது மாநகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சார்பில் இந்தப் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சமுதாய நலக்கூடமானது தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டு வருகின்றன. தரைத்தளத்தில் கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

முதலாவது தளத்தில் ஒரே சமயத்தில் 600 நபர்கள் அமர்ந்து உணவு சாப்பிடும் வகையில் உணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் மணப்பெண், மணமகன் மற்றும் உறவினர் தங்கும் வகையில் 8 அறைகளுடன் கூடிய திருமண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும்.

அதேபோல், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மிகப்பெரிய சமுதாய நலக்கூடம் கட்டும் பணியும் நடைபெற்று வருகின்றன. அந்த கட்டிடமும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படும்.

இதுமட்டுமல்லாமல், சி.எம்.டி.ஏ. சார்பாக முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி, ரூ.180 கோடி மதிப்பீட்டில் சுமார் 16 சமுதாய நலக்கூடங்களின் கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமாக வடசென்னைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதால், வடசென்னைக்குட்பட்ட பகுதிகளில் 11 சமுதாய நலக்கூடப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் இந்த அனைத்து சமுதாய நலக்கூடங்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் தூய்மைப் பணியாளர்களுக்கென ஒரு சிறப்பு திட்டமாக உணவு வழங்கும் திட்டத்தை வருகின்ற நவம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார். தூய்மைப் பணியாளர்களிடையே இந்தத் திட்டம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. சுழற்சி முறையில் தூய்மைப் பணியாளர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் இன்றைக்கு அவர்களுக்காக தனித்துவமாக உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் வரவிருக்கும் 15-ந்தேதி நடைமுறைக்கு கொண்டுவர உள்ளார்.

விக்டோரியா பொது அரங்கப் பணிகளில் சில சிறிய பணிகள் மட்டும் நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அவையும் கூடிய விரைவில் முடிவடைந்து தமிழ்நாடு முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்படும். இந்த மாதம் வடகிழக்குப் பருவமழை குறைவாக இருந்தாலும், வரவிருக்கும் நாட்களில் சுமார் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு, மாநகராட்சியின் சார்பாக அனைத்து முன்னெச்சரிக்கைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தேவையான அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு மேயர் பிரியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின்போது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும முதன்மைச் செயல் அலுவலர் அ.சிவஞானம், மண்டலக் குழுத்தலைவர் பி.ஸ்ரீராமுலு, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைமைப் பொறியாளர் மகாவிஷ்ணு, கண்காணிப்புப் பொறியாளர் ராஜன்பாபு, மண்டல அலுவலர் விஜய்பாபு, உள்ளாட்சி பிரதிநிதி முரளி, மாமன்ற உறுப்பினர் ராஜேஷ் ஜெயின் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்