சென்னை, தெலுங்கானாவில் மாயமான சிறுமிகள் கன்னியாகுமரியில் மீட்பு

சிறுமிகள் 2 பேரையும் பாதுகாப்பாக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.;

Update:2025-11-11 03:33 IST

கோப்புப்படம் 

கன்னியாகுமரி,

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குமரி மாவட்ட சூப்பிரண்டு ஸ்டாலின், கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுலா போலீஸ் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த போலீசார் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று காலை சுற்றுலா போலீஸ் குழுவினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கன்னியாகுமரி கடற்கரை அருகே 2 சிறுமிகள் தனியாக சுற்றித்திரிவதை போலீசார் கவனித்தனர்.

உடனே அவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் 15 வயது சிறுமி ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர் என்றும், கடந்த செப்டம்பர் மாதம் தனது வீட்டிலிருந்து வெளியேறியதாகவும், இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அதேபோல் மற்றொரு 18 வயது சிறுமி தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் பாதுகாப்பாக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சிறுமிகளை பாதுகாப்பாக மீட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த சுற்றுலா போலீசாரை மாவட்ட சூப்பிரண்டு ஸ்டாலின் பாராட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்