திண்டுக்கல்லில் ரூ.1,595 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்; மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட உள்ள புதிய பஸ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார். மேலும் 111 முடிவுற்ற பணிகள், 212 புதிய பணிகள் என மொத்தம் ரூ.1,595 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
அதோடு 30 ஆயிரம் பேருக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள், ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு பட்டா ஆகியவற்றையும் வழங்குகிறார். அதேபோல் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிடுகிறார். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட உள்ள புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதற்காக மதுரையில் இருந்து கார் மூலம் திண்டுக்கல்லுக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் சரவணன், எம்.எல்.ஏ.க்கள் இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
அதேபோல் திண்டுக்கல்-மதுரை சாலையில் பாண்டியராஜபுரத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை 38 கி.மீ. தூரம் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 இடங்களில் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்களின் வரவேற்பை ஏற்று கொள்கிறார்.
இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவுக்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றன. அதன்படி விழாவில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கு பிரமாண்ட மேடை, நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள், பொதுமக்கள் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருக்கிறது.