தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவெடுத்துள்ளது. இது இன்று (புதன்கிழமை) தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அடுத்த 72 முதல் 90 மணி நேரத்தில் அதாவது 10-ந்தேதியன்று (சனிக்கிழமை) மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும். அவ்வாறு வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
இதன் காரணமாக வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 12-ந்தேதி (திங்கட்கிழமை) வரையிலான 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். 9-ந்தேதி பிற்பகலில் காவிரி டெல்டா பகுதியில் தொடங்கும் மழை பின்னர் படிப்படியாக கடலோரப் பகுதிகளிலும் பெய்யும்.
10, 11-ந்தேதிகளில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை இருக்கும் என்றும், தாழ்வு மண்டலத்தில் காற்று குவிதல் தமிழக கடலோரப் பகுதிகளில் சாதகமாக அமையும் என்பதால் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா, கடலோர மாவட்டங்களை தொடர்ந்து உள் மாவட்டங்கள் மற்றும் தெற்கு உள்மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் மழை பரவலாக பெய்யும் என்றே கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த மழை விவசாயிகளுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் இருக்கும். அதற்கேற்றாற்போல், அவர்கள் தங்கள் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.