திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ரூ.1 கோடியை தாண்டியது உண்டியல் காணிக்கை
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையில் முதன்முறையாக ரூ.1 கோடியே 5 லட்சம் கிடைத்தது.;
மதுரை,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 40 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்களில் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த வகையில் உண்டியல்கள் அனைத்தும் நிரம்பியதும் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படும். ஆனால் கடந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று கோவில் துணை கமிஷனர் எம்.சூரியநாராயணன் மேற்பார்வையில் உண்டியல்கள் அனைத்தும் திறந்து எண்ணப்பட்டன. இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உதவி கமிஷனர் இளங்கோ, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் இளவரசி, கோவில் உள்துறை சூப்பிரண்டுகள் சுமதி, சத்தியசீலன், அலுவலக சூப்பிரண்டு ரஞ்சனி, ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் காணிக்கை எண்ணப்பட்டன. காலை 9 மணிக்கு தொடங்கிய காணிக்கை எண்ணும் பணி இரவு 9 மணி வரை நடைபெற்றது.
காணிக்கை எண்ணும் பணியில் கோவில் துணை கமிஷனரின் நேர்முக உதவியாளர் மணிமாறன், பேஷ்கார்கள் புகழேந்தி, நெடுஞ்செழியன் உள்பட கோவில் ஊழியர்கள், வேத சிவாகம பாடசாலை மாணவர்கள், மற்றும் திருப்பரங்குன்றம் ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பக்தர்கள் பேரவையின் உறுப்பினர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.உண்டியல் காணிக்கை முதன் முறையாக ரூ.1 கோடியே 5 லட்சத்து 1,654 ரொக்கமாக கிடைத்தது. மேலும் தங்கம் 201 கிராமும், 3.902 கிலோ வெள்ளியும் கிடைத்தது.