அரசு மருத்துவக்கல்லூரியில் சீட்; மகளின் உந்துதலால் 49 வயதில் தாய் சாதனை

என்னுடைய மகளின் புத்தகங்களை கடனாக வாங்கி, தேர்வுக்கு தயாரானேன் என்று அமுதவல்லி பெருமையுடன் கூறியுள்ளார்.;

Update:2025-07-31 12:53 IST

விருதுநகர்,

எம்.பி.பி.எஸ். எனப்படும் மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில், சிறப்பு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.

இந்நிலையில், கலந்தாய்வில் பங்கேற்க தாயும், மகளும் வந்திருந்தனர். முதலில் மகளுக்காக தாய் உடன் வந்திருக்கிறார் என நினைத்திருந்தபோது நிலைமை மாறி, கலந்தாய்வில் மகள் உதவியுடன் தாய் மருத்துவப்படிப்பை தேர்வு செய்துள்ளார். இது ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இருந்து வந்திருந்த அமுதவல்லி மணிவண்ணன் (வயது 49) என்ற அந்த பெண் கலந்தாய்வில் கலந்து கொண்டு, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

நீட் தேர்வில் அமுதவல்லி 147 மதிப்பெண் எடுத்திருந்தபோதும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அவருக்கு இடம் கிடைத்திருக்கிறது. விருதுநகர் மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்து இருக்கிறார்.

இதுபற்றி அமுதவல்லி செய்தியாளர்களிடம் பேசியபோது, 30 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி படிப்பை முடித்ததும், மருத்துவ படிப்பில் சேர முயன்றேன். ஆனால் முடியவில்லை. அதனால் பிசியோதெரபி படிப்பை தொடர்ந்தேன் என்றார். பள்ளி காலத்தில் பாடங்கள் அதிக கடினம் வாய்ந்திருந்தது. அதனால், பிசியோதெரபி படிப்பில் சேர்ந்தேன் என கூறினார்.

இந்நிலையில், அவருடைய மகள் சம்யுக்தா கிருபாளினி பயிற்சி வகுப்புக்கு சென்றிருக்கிறார். அப்போது அவர் படித்த புத்தகங்கள், அவருடைய தாயாருக்கும் பயன்பட்டு உள்ளது. மகளின் ஆர்வம் இவருக்கும் தொற்றி கொண்டது. இதனால், தேசிய அளவில் போட்டி போடும் நீட் தேர்வுக்கு தயாரானார். என்னுடைய மகளே எனக்கு உந்துதல் ஏற்படுத்தினார். மகளின் புத்தகங்களை கடனாக வாங்கி, தேர்வுக்கு தயாரானேன் என்று அமுதவல்லி பெருமையுடன் கூறியுள்ளார்.

மருத்துவம் படிக்க இருக்கும் அமுதவல்லியின் மகள் சம்யுக்தா கிருபாளினியும் நீட் தேர்வில் 450 மதிப்பெண் எடுத்து, பொது கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார். அவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தாயும், மகளும் ஒரே ஆண்டில் மருத்துவப்படிப்பில் நுழைவார்கள்.

இதுபற்றி அமுதவல்லியின் மகள் மற்றும் சி.பி.எஸ்.இ. மாணவியான சம்யுக்தா கூறும்போது, நான் என்னுடைய தாயார் படிக்கும் அதே கல்லூரியில் படிக்க விரும்பவில்லை. பொது கலந்தாய்வில் கலந்து கொண்டு போட்டியிட விரும்புகிறேன். தமிழகத்திற்கு வெளியே ஏதேனும் ஒரு மாநிலத்தில் படிக்க விரும்புகிறேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்