மாரியம்மன் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள் - நெகிழ வைத்த மதநல்லிணக்கம்

9 வகையான சீர்வரிசைப் பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் நிர்வாகத்தினரிடம் இஸ்லாமியர்கள் ஒப்படைத்தனர்.;

Update:2025-11-02 21:38 IST

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த கொக்கராயன்பேட்டையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீசுயம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊர் பொதுமக்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கோவில் விழாக் குழுவினர் காலங்காலமாக தொன்று தொட்டு நடைபெற்று வரும் பாரம்பரிய முறைப்படி, மேளதாளங்கள் முழங்க கோவில் அருகில் உள்ள அல் முகமதியா ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலுக்குச் சென்று, அங்கிருந்த ஜமான் பெரியவர்களிடம் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து பள்ளிவாசல் முத்தவல்லி ஜலீல் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், அன்னதானத்திற்கான ரொக்கப்பணம் ரூ.1 லட்சம், சந்தனம், மாலை, பழங்கள் உள்ளிட்ட 9 வகையான சீர்வரிசைப் பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அந்த சீர்வரிசைப் பொருட்களை கோவில் நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்