நாட்டு நலப்பணித் திட்டம்: சிறப்பு முகாம்கள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சிறப்பு முகாம் 7 நாட்களுக்கு நடத்தப்படவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.;
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தன்னார்வலர் பணிகளையும், தனித்திறன்களை வளர்த்தல் சார்ந்தும் சமூகத்துடன் வளர்ச்சிக்கான பங்களிப்புகளை அளிப்பதற்கும் நாட்டு நலப்பணித் திட்ட செயல்பாடுகள் இருந்து வருகிறது. அந்த வகையில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, சிறப்பு முகாம் 7 நாட்களுக்கு நடத்தப்படவேண்டும். முகாமில் பங்கேற்கும் மாணவர்களின் பெற்றோரிடம் இருந்து மறுப்பின்மை சான்றிதழ் பெற்ற பின்னரே சிறப்பு முகாமில் பங்கேற்க செய்யவேண்டும். முகாம் அழைப்பிதழில் இடம்பெறும் பெயர்கள் மற்றும் விவரங்கள் தமிழில் தான் இருக்கவேண்டும். மாணவர்கள் தங்கும் இடங்களில் போதிய வசதிகள் இருப்பதோடு, முறையான அனுமதியின்றி மாணவர்களை முகாமில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கக்கூடாது.
மூடநம்பிக்கை சார்ந்த மற்றும் மதம் சார்ந்த பரப்புரைகளை மேற்கொள்ள எவருக்கும் அனுமதி அளிக்கக்கூடாது. மேலும், குறைந்தது 1,000 மரக்கன்றுகள் மற்றும் விதைகள் நடவேண்டும். உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்வு, மண் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, போதைப்பொருள் தடுப்பு சார்ந்த விழிப்புணர்வு உள்ளிட்ட செயல்பாடுகளை சிறப்பு முகாமில் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.