நெல்லையில் பரபரப்பு: போலீஸ்காரருக்கு சரமாரி அரிவாள் வெட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதான வளாகத்தில் மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. வார விடுமுறை தினமான நேற்று இங்கு ஏராளமானவர்கள் குடும்பத்துடன் சென்றதால் கூட்டம் அலைமோதியது. இரவு 9 மணி அளவில் பூங்காவில் நின்ற சில இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு குடும்பத்தினருடன் வந்த போலீஸ்காரரான மணிமுத்தாறு 9-வது பட்டாலியனைச் சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா (வயத 29) இளைஞர்களை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், போலீஸ்காரர் முகமது ரஹ்மத்துல்லவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார், பூங்காவுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே போலீஸ்காரர் முகமது ரஹ்மத்துல்லாவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி, தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.