நீலகிரி: வீட்டுக்குள் நுழைய முயன்ற சிறுத்தையை விரட்டிய வளர்ப்பு நாய்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.;

Update:2025-06-06 06:43 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நம்பியார்குன்னு புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ குமார். இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே தோட்டத்திற்கு நடந்து சென்றார். அப்போது எதிரே சிறுத்தை ஒன்று ஆக்ரோஷமாக நடந்து வந்தது. இதை கண்ட அவர் அலறியடித்து ஓட்டம் பிடித்தார். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து கூச்சலிட்டதை அடுத்து, சிறுத்தை அங்கிருந்து ஓடியது.

இந்தநிலையில் நேற்று பிரபா வீட்டின் கதவை திறந்த போது, சிறுத்தை வாசலில் நின்றது. இதனால் அவர் உடனே கதவை அடைத்து விட்டார். பின்னர் சிறுத்தை அங்கிருந்து சென்றது. இதுதொடர்பாக கூடலூர் கோட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரவின் படி, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதே போல் எருமாடு அருகே பனஞ்சிறா நேதாஜி நகரில் சந்தோஷ் என்பவரது வீட்டுக்குள் சிறுத்தை நுழைய முயன்றது. அப்போது நுழைவுவாயிலில் கட்டப்பட்டு இருந்த வளர்ப்பு நாய் சிறுத்தையை பார்த்து குரைத்தவாறு விரட்டியது. இதனால் சிறுத்தை சுற்றுச்சுவர் மீது குதித்து அங்கிருந்து ஓடியது. தகவல் அறிந்த வனத்துறையினர், பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்