திமுகவை யாராலும் ஒருபோதும் அழிக்க முடியாது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தடைகளை பார்த்துக்கூட திமுக இயக்கம் நின்றதே இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.;
திருச்சி,
திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி இல்லத் திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கடந்த 75 ஆண்டுகளாக சகோதரத்துவ உணர்வோடு நம் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். திமுகவை கழகத்தினர் கழகம் என்று மட்டும் அழைப்பதில்லை, இயக்கம் என்றும் அழைப்பது உண்டு. காரணம், இயக்கம் என்பது ஓய்வே இல்லாமல் உழைப்பது. அப்படியான இயக்கம்தான் நம் இயக்கம்.
ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும், தேர்தல் நேரமாக இருந்தாலும், இல்லை என்றாலும், எப்போதுமே திமுகவில் இருப்பவர்களுக்கு ஓய்வு என்பதே இல்லை. களப்பணிகள் எப்போதும் இருக்கும். இப்படி சுறுசுறுப்பாக இருப்பதால்தான், இன்றும் கம்பீரமாக நடைபோடுகிறோம். தடைகளை பார்த்துக்கூட திமுக இயக்கம் நின்றதே இல்லை.
திமுகவை அழிக்கப்போகிறோம் எனக்கூறி எதிரிகள் புதுப்புது உக்திகளை கையாளுகின்றனர். அந்த வகையில் தான் தற்போது எஸ்.ஐ.ஆர்-ஐ கையில் எடுத்துள்ளார்கள். எத்தனை உக்திகளை கையாண்டாலும் திமுகவை ஒருபோதும் அழிக்க முடியாது.
பாஜகவும் தேர்தல் ஆணையமும் எதைச் சொன்னாலும் ஆதரிக்கும் நிலையில்தான் அதிமுக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் திமுக தொடுத்த வழக்கில் அதிமுக தங்களையும் இணைத்துக்கொண்டு கபட நாடகம் ஆடுகிறது. எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்க்க துணிச்சல் இல்லை; டெல்லியில் இருக்கும் பிக்பாஸ்க்கு எடப்பாடி பழனிசாமி ஆமாம்சாமி போட்டுத்தான் ஆகணும். இவ்வாறு அவர் கூறினார்.