முதல்-அமைச்சர், பேரவைத் தலைவர் எவருக்கும் வானளாவிய அதிகாரம் கிடையாது - அன்புமணி ராமதாஸ்

சபாநாயகர் அறத்தை மதிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.;

Update:2025-10-18 19:57 IST

கோப்புப்படம் 

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுவுக்கு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அங்கீகரிக்க சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தொடர்ந்து மறுத்து வருகிறார். நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் அரசியல் காரணங்களுக்காக அறம் மற்றும் மரபுகளை மதிக்காமல் செயல்படுவது நியாயமல்ல. இந்த விஷயத்தில் பேரவைத் தலைவரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காக சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருள் கடந்த ஜூலை 3-ம் நாள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய சட்டப்பேரவைக் கட்சிக் கொறடாவாக மயிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றுடன் 108 நாள்கள் ஆகின்றன. அதேபோல், சட்டமன்றக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து ஜி.கே.மணி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், துணைத் தலைவராக மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் கடந்த செப்டம்பர் 24-ம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டு 24 நாள்களாகி விட்டன. இதற்கான எனது கடிதங்கள் பேரவைத் தலைவரிடம் கொடுக்கப்பட்டு விட்டன. அதுமட்டுமின்றி பல முறை அவருக்கு நினைவூட்டல்கள் செய்யப்பட்டுவிட்டன. சட்டப்பேரவையிலும் இது தொடர்பாக பல முறை வலியுறுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் பயனில்லை.

இந்த விவகாரத்தில் முடிவெடுப்பது மிகவும் எளிதானது. பாட்டாளி மக்கள் கட்சியில் மொத்தமுள்ள 5 உறுப்பினர்களில் ஒருவர் நீக்கப்பட்டு விட்டார். மீதமுள்ளவர்களின் நால்வரின் மூவர் கூடி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்துள்ளனர். அதற்கு கட்சியின் அரசியல் தலைமைக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகைய சூழலில் கட்சித் தலைவரான நான் அவர்களின் பெயர்களை பேரவைத் தலைவருக்கு அனுப்பியுள்ள நிலையில் அதை ஏற்றுக்கொள்வது தான் முறையாகும். இந்த சிக்கலில் முடிவெடுக்க ஒரே ஒரு நிமிடம் போதுமானது. ஆனால், 100 நாள்களுக்கு மேலாகியும் பேரவைத் தலைவர் முடிவெடுக்கவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் முடிவு எடுப்பதாகவும் இதுவரை கூறி வந்த பேரவைத் தலைவர், நேற்று பேரவையில் இந்த சிக்கல் எழுப்பப்பட்ட போது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்டார்.

"பேரவையின் மொத்த எண்ணிக்கையில் 10 சதவீதம், அதாவது 24 உறுப்பினர்கள் உள்ள கட்சிகளை மட்டும் தான் பேரவையில் அங்கீகரிக்க முடியும்; அவற்றுக்கு மட்டும் தான் பேரவைக்குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை அங்கீகரிக்க முடியும். 24 உறுப்பினர்களுக்கும் குறைவாக எண்ணிக்கையுள்ள கட்சிகள் குழுக்களாகத் தான் கருத முடியும். அவற்றின் பேரவைக் குழு நிர்வாகிகளில் செய்யப்படும் மாற்றங்களை அங்கீகரிக்க முடியாது" என்று கூறியிருக்கிறார். ஒரு கட்சியை எதிர்க்கட்சியாக அங்கீகாரம் செய்வதற்கு மட்டும் தான் 10 சதவீதம் உறுப்பினர்கள் தேவை. எதிர்க்கட்சியைத் தவிர மற்ற கட்சிகளின் நிர்வாகிகளின் தேர்வும் பேரவைத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டே வந்திருக்கின்றன. அவ்வாறு அங்கீகரிக்கப்படுவதன் அடிப்படையில்தான் அனைத்துக் கட்சிக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அழைப்புகள் விடுக்கப்படுகின்றன. ஆனால், அந்த மரபை வசதிக்கேற்ப பேரவைத் தலைவர் மாற்றக் கூடாது.

பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சித் தலைமையால் பரிந்துரைக்கப்பட்ட புதிய சட்டமன்ற நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும்; அவர்களுக்கு முன்வரிசையில் இடம் அளிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு ஆகும். இதை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை.

முதன்மை எதிர்க்கட்சியின் நிர்வாகிகள் மட்டும் தான் அங்கீகரிக்கப்படுவார் என்றால், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒற்றை உறுப்பினர்களான கொங்கு நாடு மக்கள் கட்சியின் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தி. வேல்முருகன், இரு உறுப்பினர் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் பேராசிரியர் ஜவாஹிருல்லா, 4 உறுப்பினர்களைக் கொண்ட மதிமுகவின் சதன் திருமலைக் குமார் ஆகியோர் எந்த அடிப்படையில் முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டனர். திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற அவர்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பிரிவில் தானே அமர வைக்கப்பட வேண்டும்? அவர்களை முதல்வரிசையில் அமர வைப்பதற்கு பேரவையின் எந்த விதி இடமளித்தது?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் நாகை மாலி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிந்தனைச் செல்வன், பா.ஜ.கவின் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட கட்சிகளின் சட்டமன்றக்குழு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் தானே முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டனர்? அதே விதியை பாமகவுக்கு கடைபிடிப்பதில் பேரவைத் தலைவருக்கு என்ன தயக்கம்? அலுவல் ஆய்வுக்குழுவுக்கு இந்தக் கட்சிகளின் சட்டப்பேரவைக் குழு உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள்? விவாதங்களில் பேச யாருடைய பரிந்துரையின் பெயரில், முதன்மை எதிர்க்கட்சி அல்லாத பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதை அப்பாவு விளக்குவாரா? எல்லா கட்சிகளுக்கும் ஒரு நீதி, பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டும் தனி நீதியா? அல்லது ஆளுங்கட்சிக்கு தாளம் தட்டுவோருக்கு முன்வரிசை அளிப்பது தான் பேரவைத் தலைவர் உருவாக்கிய புதிய விதியா?

பாட்டாளி மக்கள் கட்சியின் நியாயமான வினாக்களுக்கு பதிலளிக்க முடியாத போதெல்லாம் இந்த விஷயங்களில் முடிவெடுப்பது தமது தனிப்பட்ட விருப்பம் என்றும், தமக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாகவும் பேரவைத் தலைவர் அப்பாவு கூறிக்கொள்கிறார். இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் முதல்-அமைச்சர், பேரவைத் தலைவர் போன்ற எவருக்கும் வானளாவிய அதிகாரம் கிடையாது; அவை அனைத்தும் கற்பனை தான். இங்கு ஜனநாயகம் தான் அனைத்துக்கும் அடிப்படை என்பதை பேரவைத் தலைவர் உணர்ந்து கொள்ள வேண்டும்; அதன்படியான நிர்வாகிகள் தேர்வை மதிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் பேரவைத் தலைவர் இருக்கையை ஜே சிவசண்முகம் பிள்ளை, யு. கிருஷ்ணா ராவ், எஸ். செல்லப் பாண்டியன், சி.பா. ஆதித்தனார், கே. ராஜாராம், பிடிஆர் பழனிவேல்ராஜன் போன்றவர்கள் அலங்கரித்திருக்கின்றனர். அவர்களைப் போல அனைவரும் செயல்பட வேண்டும் என்பது தான் எங்களின் எதிர்பார்ப்பு. இனியாவது பேரவைத் தலைவர் அறத்திற்கு பணிய வேண்டும்; நீதியை மதிக்க வேண்டும். அந்த வழியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக எஸ்.பி.வெங்கடேஸ்வரன், துணைத்தலைவராக சதாசிவம், கொறடாவாக சி.சிவக்குமார் ஆகியோரை அங்கீகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்