திருவள்ளூரில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வடமாநில இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்
வடமாநிலத்தவர்கள் தற்காலிக குடில்கள் அமைத்து வசிக்கின்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கனகம்மாசத்திரம் அடுத்த வி.ஜி.கே.புரத்தில் இச்சாலை பணியில் ஈடுபட்டுள்ள 20-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் அப்பகுதியில் தற்காலிக குடில்கள் அமைத்து வசிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று அப்குதியில் 17 வயது சிறுமி தனியாக நடந்து செல்வதை நோட்டமிட்ட சாலை பணி செய்யும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஹெக்ரமுல் அலி (வயது 30) என்ற இளைஞர், சிறுமி வாயைப்பொத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி, ஹெக்ரமுல் அலியிடம் இருந்து தப்பி ஓடி வந்து கிராம மக்களிடம் இதுகுறித்து தெரிவித்தார்.
இதையடுத்து பொதுமக்கள் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள இடத்துக்கு சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஹெக்ரமுல் அலியை சரமாரியாக தாக்கி கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹெக்ரமுல் அலியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூரில் ஆரம்பாக்கம் சிறுமி , அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா என்ற இளைஞரால் பாலியல் வன்கொடுமை சம்பவம் அடங்குவதற்குள், அதே மாவட்டத்தில் உள்ள கனகம்மாசத்திரம் பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஹெக்ரமுல் அலி என்ற இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.