பெண்ணின் வீட்டில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் கைது: 77 பவுன் நகைகள் மீட்பு
பெண்ணின் வீட்டில் கொள்ளையடித்த, பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
குமரி,
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் அகிலேஷ் நாடார். இவருடைய மகள் ஜெகதி குமாரி என்ற டாடா (வயது52), இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஏராளமான நகைகள் உள்ளன.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்த போது ஒரு மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்துள்ளார். அவர் வீட்டில் பீரோவில் இருந்த 77 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். இந்த சம்பவம் நடந்து சில தினங்கள் கடந்த பின்னரே ஜெகதி குமாரிக்கு வீட்டில் இருந்த நகைகள் கொள்ளைபோனது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அத்துடன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது நித்திரவிளை அருகே உள்ள சரல்முக்கு பகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்ற ஜஸ்டின் (31) என்பவர் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் உள்ளன. இதையடுத்து ஸ்டாலினை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது. அதாவது ஸ்டாலின், ஜெகதி குமாரி வீட்டில் இருந்து நகைகள் மட்டுமின்றி, 2 தாமிர குடங்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளார். தொடர்ந்து கொள்ளையடித்த நகைகளை, பல நகை கடைகளில் கொடுத்து புதிய நகைகளை வாங்கி சேர்த்துள்ளார். மேலும் இவர் நூதனமுறையில் கொள்ளையடிப்பதில் பலே கில்லாடி என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து ஸ்டாலின் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளையடிக்கப்பட்ட 77 பவுன் நகைகளையும், 2 தாமிர குடங்களையும் போலீசார் மீட்டனர். அத்துடன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்தனர். பின்னர் அவரை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெண்ணின் வீட்டில் கொள்ளையடித்த, பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.