4-ந் தேதி மதுரையில் நடக்க இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மாநாடு ஒத்திவைப்பு

ஓ.பன்னீர்செல்வத்தின் மதுரை மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.;

Update:2025-08-31 10:58 IST

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த மாதம் 14-ம் தேதி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சிக்க வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தால் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் ஆதரவாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.

இதனிடையே அந்த ஆலோசனை கூட்டத்தில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதற்கான சட்ட போராட்டம் தொடரும். சட்ட போராட்டத்தில் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி. அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தவே தர்மயுத்தம் நடத்தி கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் நம்முடைய நோக்கத்தை வென்றெடுப்போம். மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள் மட்டுமே முதல்-அமைச்சராக முடியும். எடுத்துள்ள சில முடிவுகளை வெளியே சொல்ல முடியாது. அது என்ன என்பது குறித்து உங்களுக்கு தெரியும். எனது தலைமையில் வருகிற செப்டம்பர் மாதம் 4-ந்தேதி மதுரையில் மாநில மாநாடு நடத்தப்படும். எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது குறித்து மதுரை மாநாட்டில் அறிவிப்பேன்” என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் செப்டம்பர் 4-ம் தேதி மதுரையில் நடைபெற இருந்த ஓ.பன்னீர் செல்வம் அணியின் மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

14-07-2025 அன்று சென்னை, வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் நடைபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க 4-09-2025 அன்று மதுரையில் நடைபெறுவதாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு கழக உயர்மட்டக் குழு ஆலோசனையின்படி ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்