கோவில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு... காசோலை வழங்கி துவக்கி வைத்த முதல்-அமைச்சர்
சேமநலநிதி மூலம் ஓய்வூதியம் பெறும் 3,037 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 769 குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.;
2025 – 2026 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்புகளில், ஓய்வுபெற்ற கோவில் பணியாளர்களுக்கான ஓய்வூதிய உயர்வு தொடர்பான அறிவிப்புகளும் இடம்பெற்றிருந்தன.
அதாவது “திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, துறை நிலை ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு தற்போது ரூ.4,000/– ஒய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.4,000/– லிருந்து ரூ.5,000/–ஆக உயர்வு செய்யப்படும் எனவும், துறை நிலை குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தற்போது ரூ.2,000/– ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.2,000/–லிருந்து ரூ.2,500/– ஆக உயர்வு செய்யப்படும்” எனவும்,
“திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, தொழிலாளர் சேமநலநிதி (EPF) ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்கள் தற்போது ரூ.900/– முதல் ரூ.2,190/- வரை மட்டுமே ஒய்வூதியமாக பெற்று வருகின்றனர். இவர்களுக்கு துறை நிலையிலான ஓய்வூதியம் பெறும் பணியாளர்களுக்கு இணையாக கருணைத்தொகை (EX–gratia) வழங்கப்படும். இத்தொகை ஆணையர் அலுவலகத்தில் பேணப்படும் மையநிதி வட்டித் தொகையிலிருந்து வழங்கப்படும். மேலும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் கருணைத் தொகை வழங்கப்படும்“ என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், 3,037 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 769 குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கிடும் அடையாளமாக 12 நபர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதிற்கான காசோலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல்-அமைச்சருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் ந.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் டாக்டர் சி.பழனி, பொ.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.