தமிழகம் முழுவதும் 9,207 பட்டாசு கடைகளுக்கு அனுமதி
சென்னையில் மட்டும் 89 கடைகளுக்கு தடையின்மைச் சான்று மறுக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர், அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 384 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் தொடர் பணியில் ஈடுபடவுள்ளனர்.
சென்னையில் உள்ள 43 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் உள்ள பணியாளர்களும் இன்று (18-ந்தேதி) முதல் தொடர் பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது குறித்து தமிழகம் முழுவதிலும் 2,705 இடங்களில் (பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில்) விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை செய்வதற்கு 9,207 கடைகளுக்கு தடையின்மைச் சான்றும், சென்னையில் தற்காலிக பட்டாசு விற்பனை செய்வதற்கு 1,088 கடைகளுக்கு தடையின்மைச் சான்றும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழுவதும் 770 கடைகளுக்கும், சென்னையில் மட்டும் 89 கடைகளுக்கும் தடையின்மைச் சான்று மறுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.