தவெக அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி மனு; மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
கூட்டத்தின்போது நிபந்தனைகளை பின்பற்றவில்லை எனக்கூறி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.;
மதுரை,
கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதாவது, மதுரை மானகிரியை சேர்ந்த வக்கீல் செல்வகுமார், மதுரை ஐகோர்ட்டில் இ-மெயில் மூலமாக மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தவெக கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட போதிலும், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் நெரிசலான இடத்தில் கூடியிருந்தனர்.
அலட்சியம், தவறான நிர்வாகம், சட்டப்பூர்வ அனுமதிகளை மீறியதன் விளைவாக, அந்த கூட்டத்தில் பங்கேற்ற சிறார்களும், பெண்கள் உள்பட 40 அப்பாவி மக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர். கரூர் கூட்டத்தில் சிறார், பெண்கள் பங்கேற்பதை தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். இதன் விளைவாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிடுவது அவசியமாகிறது. எனவே ஏராளமான உயிரிழப்பு களுக்கு காரணமான தமிழக வெற்றிக்கழக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
அதேபோல சிவகங்கை மாவட்டம் ஆளவந்தான்பட்டியை சேர்ந்த வக்கீல் முருகேசன் என்பவர், கரூர் துயர சம்பவத்துக்கு காரணமான நடிகர் விஜய் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த கோரிக்கை தொடர்பாக இன்று மனுதாரர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல மேலும் பலரும் இன்று காலையில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வந்து உள்ளன. இந்த மனுக்களை இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.