பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? - போலீசார் விசாரணை

திருவெறும்பூர் அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2025-07-29 04:31 IST

பொன்மலைப்பட்டி,

திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் மூக்கையன். இவர் காய்கறி வியாபாரி. இவரது மனைவி ராஜேஸ்வரி, இவர்களது 17 வயது மகள், பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை மூக்கையனும், ராஜேஸ்வரியும் வேலைக்கு சென்று விட்டனர். மாணவியும் சீருடை அணிந்து பள்ளிக்கு செல்ல புறப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் அவர் செல்லாத நிலையில், வெகு நேரமாக கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதைக்கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் மின்விசிறியில் மாணவி தூக்குப்போட்டு தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மாணவியின் தந்தை மூக்கையன் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்