சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-09-05 09:33 IST

கடலூர்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியாத்துகுறிச்சியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). இவர் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் விஜயகுமார் மீது அவரது தாய் மலர்கொடி, தனது மகன் சொத்து பிரச்சினை காரணமாக தன்னை அடித்து துன்புறுத்துவதாக ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஆண்டிமடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு அழைத்துள்ளார்.

இதையடுத்து கடந்த மாதம் 28-ந்தேதி விநாயகர் சிலை பாதுகாப்பு பணியில் இருந்த விஜயகுமார் திடீரென, ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். பின்னர் அங்கு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேசை ஆபாசமாக திட்டி, சட்டையை பிடித்து இழுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். இந்த நிலையில் காவல்துறையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் தகாத செயலில் ஈடுபட்ட ஏட்டு விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்