அரியலூரில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய போலீஸ்காரர்
இந்த சம்பவத்தில் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.;
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் அனிதா (வயது 19). இவர் நேற்று முன்தினம் திருச்சி செல்வதற்காக அரியலூர் ரெயில் நிலையத்தில் உள்ள முதல் பிளாட்பாரத்திற்கு வந்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து திருச்சி சென்ற பயணிகள் ரெயிலில் அனிதா ஏற முயன்றார்.
அதற்குள் அந்த ரெயில் புறப்பட்டு சென்றது. ஓடும் ரெயிலில் ஏறிய அனிதா படியில் உள்ள கைப்பிடியை பிடித்துக்கொண்டார். மழையின் காரணமாக கைப்பிடி சறுக்கி அவர் கீழே விழ முயன்றார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அலறினார்கள்.
அப்போது அங்கு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் செந்தில் ஓடிச்சென்று அனிதாவை காப்பாற்றி ரெயில் உள்ளே தள்ளி விட்டார். மேலும், பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்த சக பயணிகள் கீழே விழுந்த பையை எடுத்து அனிதாவிடம் கொடுத்தனர். இந்த சம்பவத்தில் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓடும் ரெயிலில் இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் செந்திலுக்கு திருச்சி கோட்ட மேலாளர், போலீஸ் உயர் அதிகாரிகள், பயணிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.