கள்ளக்காதலியை கொன்று எரித்த போலீஸ்காரர் - பரபரப்பு தகவல்கள்
அலங்கியம் பகுதியில் பதுங்கி இருந்த சங்கரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த உத்தமபாளையம் வட்டமலை அணை அருகே, வனப்பகுதியில் கடந்த 6-ந் தேதி உடல் கருகியநிலையில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக வெள்ளகோவில் போலீசார் விசாரித்தனர்.
அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தபோது, கொலை செய்யப்பட்ட பெண் திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டி ஏகலளையாம்பாளையம் புதூரை சேர்ந்த துரை என்பவரது மனைவி வடிவுக்கரசி (வயது 45) என்று தெரியவந்தது. அவரை ஸ்கூட்டரில் அழைத்து வந்தவர், அதே ஊரை சேர்ந்த சங்கர் (55) என்பதை போலீசார் கண்டறிந்தனர்.
சங்கர்தான் அந்த பெண்ணை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பகுதியில் பதுங்கி இருந்த சங்கரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் சங்கர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
எனக்கு 4 மனைவிகள். இவர்கள் மூலம் 3 மகள்கள், 3 மகன்கள் பிறந்தனர். நான் போலீசாக பணியாற்றி 1998-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று விட்டேன். எனக்கும், வடிவுக்கரசிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது. இந்தநிலையில், வடிவுக்கரசியின் உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக 2 பேரும் சேர்ந்து பணம் வாங்கினோம். அந்த பணத்தை செலவு செய்து விட்டோம். அரசு வேலை வாங்கி கொடுக்காததால் வடிவுக்கரசியிடம் பணம் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்தனர்.
இதன் காரணமாக வடிவுக்கரசி, என்னிடம் கொடுத்த பணத்தை கேட்டார். இதனால் எங்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் எனது மனைவிகளில் ஒருவரின் சொந்த ஊர் வெள்ளகோவில் வட்டமலை அணை அருகில் உள்ள தாசநாயக்கன்பட்டி ஆகும். எனவே கடந்த 5-ந்தேதி தாசநாயக்கன்பட்டியில், பணம் வாங்கி தருவதாக கூறி வடிவுக்கரசியை ஸ்கூட்டரில் அழைத்து வந்தேன். வரும் வழியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கினேன்.
பின்னர் 2 பேரும் வட்டமலை அணை பகுதிக்கு சென்று மது அருந்தினோம். அப்போது பண பிரச்சினை தொடர்பாக 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான், வடிவுக்கரசி உயிரோடு இருந்தால் தானே பணம் கேட்டு தொந்தரவு செய்வார். அவரை கொன்று விட்டால் என்ன? என்று முடிவு செய்தேன்.
அதன்படி அருகில் கிடந்த கருங்கல்லை எடுத்து வடிவுக்கரசியின் தலையில் போட்டேன். சிறிதுநேரத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். அதன்பிறகு அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தேன். பின்னர் அவரை அடையாளம் காண முடியாத அளவுக்கு முகத்தை சிதைத்து தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்று விட்டேன்.
இவ்வாறு சங்கர் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்த 6 பவுன்நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கொலை செய்யப்பட்ட வடிவுக்கரசிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.