விஜய் தலைமையில் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு கூட்டம் தொடங்கியது
கோவை வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு கூட்டத்தில் விஜய் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.;
கோவை,
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவர் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை நடத்த உள்ளார்.
அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத் தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
கோவை வருகை
இதில் ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கு இன்றும், கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான கருத்தரங்கு நாளையும் மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கோவையில் முகாமிட்டு செய்து வருகிறார்.
கருத்தரங்கில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வாகனத்தில் ஏறி நின்றபடி தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார். விஜய் மீது ரசிகர்கள் தங்களது கட்சி கொடிகளை தூக்கி வீசினார். அவற்றை வாங்கி கழுத்தில் போட்டுக் கொண்ட விஜய் , அவரது வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து அவினாசி சாலையில் அவர் தங்கும் நட்சத்திர விடுதியினை நோக்கி வாகனம் நகர்ந்தது. அப்போது தீடீரென ஒரு ரசிகர் உற்சாக மிகுதியில் விஜய் வாகனத்தின் மீது ஏறி அவர் அருகில் சென்று கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் வாகனத்தின் மீது ஏறி அவரை கீழே இறக்கினர். இதனையடுத்து மகிழ்ச்சியுடன் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு அவர் தங்கி இருத்த ஓட்டலுக்கு விஜய் சென்றார்.
இதனிடையே விஜயை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வு எடுத்தார்.
அதன்பிறகு அவர் மதியம் 3 மணிக்கு கருத்தரங்கு நடைபெறும் இடத்துக்கு காரில் சென்றார். அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து புறப்பட்ட விஜயை கண்டு தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். விடுதி வாசலில் காத்திருந்த நூற்றுக்கணக்கானவர்கள் விஜயை பார்த்து உற்சாகமாக குரலெழுப்பி ஆரவாரம் செய்தனர்.
இந்நிலையில் விஜய் தலைமையில் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு கூட்டம் தற்போது தொடங்கி உள்ளது. இதனையடுத்து வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு கூட்டத்தில் விஜய் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கருத்தரங்கு நடைபெறும் கல்லூரியின் கேட்டை திறந்து முண்டியடித்து உள்ளே சென்ற தொண்டர்களால் பரபரப்பு நிலவியது.
தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்
கருத்தரங்கு கூட்டத்தில் தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்தார், அதன்படி, "Friends, அங்க நிறைய Wire போகுது... பாதுகாப்புக்காக சொல்றேன், கொஞ்சம் பின்னாடி வந்துடுங்க. இன்னும் 2, 3 மணி நேரம் இங்க உங்ககூடதான் இருக்கப்போறேன். தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க" என்று விஜய் கூறினார்.