பொங்கல் சிறப்பு ரயில்கள் முன்பதிவு...ஆர்வம் காட்டாத பயணிகள்
ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், வழக்கத்திற்கு மாறாக முன்பதிவு இந்த முறை மந்தமாக இருந்தது;
சென்னை,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 8ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில்–தாம்பரம் இடையேயான சிறப்பு ரயில் வரும் 11, 18 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்படும் என்றும், மறுமார்க்கத்தில் தாம்பரம்–நாகர்கோவில் இடையே வரும் 14, 21 ஆகிய தேதிகளில் பிற்பகல் 12.30 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு–நெல்லை அதிவிரைவு ரயில் வரும் 9, 16 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் எனவும், மறுமார்க்கத்தில் வரும் 10, 17 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை–எழும்பூர் அதிவிரைவு ரயில் வரும் 8ஆம் தேதி இரவு 11.30 மணிக்கும், மறுமார்க்கத்தில் வரும் 9ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கும் புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, மங்களூருக்கும், தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி, ராமேஸ்வரத்திற்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 10 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 34 சேவைகளாக இந்த ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், வழக்கத்திற்கு மாறாக முன்பதிவு இந்த முறை மந்தமாக இருந்தது. பொதுவாக பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாட்களில் அதிக அளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால், 13 மற்றும் 14ஆம் தேதிகளில் பெரிய அளவில் ரயில்கள் அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக ரயில் டிக்கெட் முன்பதிவில் பயணிகள் போதிய ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.