தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதைத் தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி- அன்புமணி
தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை திமுக அரசுக்கு இல்லாதது கண்டிக்கத்தக்கது என அன்புமணி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாட்டின் ஒரே வற்றாநதியான தாமிரபரணியை தூய்மைப்படுத்தும் விஷயத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்திருக்கும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யும்படி, இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்று போற்றப்படுபவரான ராஜேந்திர சிங்கை கேட்டுக்கொண்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.
நெல்லை மாவட்டம் பெரிய பொதிகை மலையில் உருவாகி புன்னைக்காயல் பகுதியில் வங்கக்கடலில் கலக்கும் தாமிரபரணி ஆறு ஒரு காலத்தில் நோய்களைத் தீர்க்கும் ஆறாக திகழ்ந்தது. ஆனால், இப்போது கழிவுகளின் சங்கமமாக மாறிவிட்ட தாமிரபரணி ஆறு நோய்களை உருவாக்கும் ஆதாரமாக மாறி விட்டது. இது தொடர்பாக முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தான் மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதியரசர் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த ஆணையை பிறப்பித்துள்ளது.
தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய நீதியரசர்கள்,‘‘தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுப்பது தொடர்பாக நாங்கள் பல ஆணைகளை பிறப்பித்திருக்கிறோம். மாநில அரசு. மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றை இந்தப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறோம். இந்த நடவடிக்கைகளில் ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் என்றாலும் இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் திருப்தியளிக்கவில்லை. இதற்கான பயனளிக்கும் தீர்வுகள் எங்கள் முன் வைக்கப்படவில்லை” என்றும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.
தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்கான நீதிமன்ற ஆணையராக தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங்கை நியமித்துள்ள உயர்நீதிமன்றம், ’’திண்டுக்கல்லில் பாராட்டுக்குரிய வகையில் களப்பணியாற்றிய பாலாஜி ரங்கராமானுஜத்தின் உதவியை ராஜேந்திர சிங் பெற்றுக் கொள்ளலாம். ராஜேந்திர சிங்கிற்கு மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீர்வளத்துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றும் ஆணையிட்டுள்ளது.
தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்று கோரி நீரியல் வல்லுனர் முத்தாலங்குறிச்சி காமராஜ், நெல்லை முத்துராமன், காட்டுராஜா ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருப்பதையும், அவற்றை விசாரித்த நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன்- நீதியரசர் புகழேந்தி அமர்வு, நீதியரசர் கிருபாகரன் - நீதியரசர் சுந்தர் அமர்வு, நீதியரசர் கிருஷ்ணகுமார் - நீதியரசர் விஜயகுமார் அமர்வு ஆகியவை பல ஆணைகளை பிறப்பித்தும், அவை நடைமுறைப்படுத்தப்படாததையும் நான் அறிவேன்.
முத்தாலங்குறிச்சி காமராஜ் கடந்த 2018-ஆண்டில் தொடர்ந்த வழக்கில் 2024-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் நாள் தீர்ப்பளித்த நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதியரசர் புகழேந்தி ஆகியோர் ‘‘தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக தடை செய்ய வேண்டும்’’ என உத்தரவு பிறப்பித்தார்கள். ஆனால் இந்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தாத நிலையில் அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் நெல்லை மாநகராட்சி ஆணையர் சுகபுத்ராவை 2024 நவம்பர் 5-ஆம் தேதி நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரித்த போது “ 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாமிரபரணியில் கழிவுநீர் கலக்காது” என மாநகராட்சி ஆணையர் வாக்குறுதி அளித்தார்.
அதன்பின் 2024- நவம்பர் 10-ஆம் தேதி தாமிரபரணி ஆற்றை நேரில் ஆய்வு செய்த இரு நீதிபதிகளும் பணிகளை விரைவுபடுத்தும்படி ஆணையிட்டனர். ஆனால், தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க இன்று வரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து தான் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் ஒரு கட்டமாக கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நெல்லையில் தாமிரபரணி ஆற்றை நேரில் ஆய்வு செய்தேன். அப்போது எனது தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் தாமிரபரணியை காக்க வழக்கு தொடர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். தாமிரபரணியை காக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால், பயனில்லை.
தாமிரபரணி ஆறு பாபநாசத்தைக் கடக்கும் போது, அங்கு திதி என்ற பெயரில் 100 டன் பழைய துணிகள் ஆண்டு தோறும் வீசப்படுகின்றன. சேரன்மாதேவி பகுதியில் 25 லட்சம் லிட்டர் தொழிற்சாலைக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமலேயே தாமிரபரணி ஆற்றில் கலக்கவிடப்படுகின்றன. திருநெல்வேலியில் ஒன்றரை லட்சம் வீடுகளில் இருந்து அகற்றப்படும் 200 டன் திடக்கழிவுகள் தாமிரபரணி ஆற்றங்கரையில் தான் கொட்டப்படுகின்றன. இவை எதையும் அரசு தடுத்து நிறுத்தவில்லை. இதைச் செய்யாமல் தாமிரபரணி ஆற்றைக் காப்பாற்ற முடியாது.
தாமிரபரணி ஆற்றைக் காக்க வேண்டும் என்று திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே மதுரை உயர்நீதிமன்றம் பல்வேறு ஆணைகளை பிறப்பித்திருக்கிறது. ஆனால், தமிழக அரசு தான் அவற்றை நிறைவேற்றாமல் தாமதித்து வருகிறது. தாமிரபரணி போன்ற வற்றா ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை திமுக அரசுக்கு இல்லாதது கண்டிக்கத்தக்கது. இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
பிலிப்பைன்ஸ் அரசால் வழங்கப்படும் ரமோன் மகசேசே விருது வென்றவரான தண்ணீர் மனிதர் ராஜேந்திர மகசேசே இந்தத் துறையில் செய்துள்ள பணிகள் வரலாற்று சிறப்பு மிக்கவை. 27.05.2017ஆம் நாள் சென்னை ஐ.ஐ.டியில் எனது தலைமையில் நடைபெற்ற தொலைநோக்குத் திட்டம் -2022 (வேளாண்மை) என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டவர். நீர்வளங்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட அவர், தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுத்து நிறுத்தி ஆற்றைத் தூய்மைப்படுத்த சிறப்பான திட்டங்களை வகுத்துத் தருவார் என்று உறுதியாக நம்புகிறேன். அடுத்து வரும் ஆட்சியில் அவர் அளிக்கும் பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்த பா.ம.க. நடவடிக்கை எடுக்கும் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.