"பொங்கலோ பொங்கல்...” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
பெண்கள் அதிகாலையில் குளித்து, வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட்டு, பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.;
சென்னை,
சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பு என்கிறோம். இதையே மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
அதன்படி, இன்று பெண்கள் அதிகாலையில் எழுந்து, வாசலில் வண்ண கோலமிட்டு, வீட்டை அலங்கரித்து, வீடுகள் தோறும் தைத்திருநாளை வரவேற்று வருகின்றனர். அத்துடன், புதிய பானையில் புது அரிசியிட்டு, பால் பொங்கி வரும் வேளையில் "பொங்கலோ பொங்கல்!" என்று குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சி பொங்க முழக்கமிட்டனர். பொங்கலை சூரிய பகவானுக்குப் படைத்து, இப்பூமி செழிக்கக் காரணமான இயற்கைக்கும் கதிரவனுக்கும் நன்றி செலுத்தி வருகின்றனர்.
இன்று சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் என இரண்டு விதமான பொங்கல்கள் வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். சிலர் பொங்கலுடன், பலவிதமான காய்கறிகள் சேர்த்து சமைத்து படையல் இடுவார்கள். இஞ்சி, மஞ்சள் குலை, கரும்பு, வாழை, தானிய வகைகள் ஆகியவற்றையும் சூரிய பகவானுக்கு படைத்து, விவசாயம் செழிக்க வேண்டிக்கொண்டனர்.
சூரிய பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் காலை 6 மணிக்கு சூரியன் உதயமாவதற்கு முன்பு பொங்கல் வைத்து, சூரியபகவானுக்கு படைத்து வழிபட்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகளை களைகட்டுவது வழக்கம், அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு, இன்றைய பொங்கல் பண்டிகை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் பண்டிகையாக விளங்கி வருகிறது.