சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமின் கோரி பூவை ஜெகன்மூர்த்தி மனு - அவசர வழக்காக விசாரணை
கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு தொடர்புள்ளதாக புகார் எழுந்தது.;
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், தேனியைச் சேர்ந்த விஜய ஸ்ரீ என்கிற பெண்ணை இன்ஸ்டாகிராமில் காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிலர் இளைஞரின் வீட்டிற்குள் நுழைந்து இளைஞரின் சகோதரர் இந்திரஜித்தை கடத்தி சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அவரை அவர் வீட்டில் விட்டு சென்றுவிட்டனர்.
இந்த கடத்தல் தொடர்பான புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். இந்த கடத்தலில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் கடத்தல் வழக்கில் போலீசார் தன்னை கைது செய்வார்கள் என்ற அச்சத்தில் ஜெகன் மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜானிக்காக மனுதாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில் வழக்கின் விசாரணையை நாளைக்கு நடத்த தலைமை நீதிபதி ஒப்புக்கொண்டார்.