அனுமதி இல்லாமல் வீட்டில் பிரார்த்தனை கூட்டம் நடத்த முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு

அனுமதி பெறாமல் வீட்டில் பிரார்த்தனை கூட்டம் நடத்த உரிமை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-06-25 06:57 IST

கோப்புப்படம் 

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா அத்திக்கடையில் ஒரு வீட்டை கிறிஸ்தவ மதபோதகர் ஜோசப் வில்சன் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு விலைக்கு வாங்கினார். பின்னர், இந்த வீட்டில் பிரார்த்தனை கூட்டம் நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் வந்து விசாரித்து உள்ளார். இதையடுத்து, இந்த கட்டிடத்துக்கு கட்டிட அனுமதியும், தேவாலயம் கட்டுவதற்கு திட்ட அனுமதியும் கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மத போதகர் ஜோசப் வில்சன் விண்ணப்பித்தார்.

ஆனால் இந்த அனுமதிகளை தர மறுத்து, விண்ணப்பத்தை கலெக்டர் நிராகரித்து உத்தரவிட்டார். இதையடுத்து இந்த பிரார்த்தனை கூடத்தை மூடி தாசில்தார் 'சீல்' வைத்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மத போதகர் ஜோசப் வில்சன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஒரு வழக்கில் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், பிரார்த்தனை கூட்டம் அரங்கம் கட்டுவதாக இருந்தால், விதிகளின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதியை பெற வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே, எந்த ஒரு அனுமதியையும் பெறாமல் பிரார்த்தனை கூட்டம் நடத்த எந்த உரிமையும் மனுதாரருக்கு இல்லை.

மனுதாரர் வீட்டை பிரார்த்தனை அரங்கமாக மாற்ற அதிகாரமும் இல்லை. அதனால், மனுதாரர் வீட்டுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும். அதே நேரம், இந்த வீட்டில் மனுதாரர் பிரார்த்தனை கூட்டத்தை நடத்தக்கூடாது.

ஒருவேளை இந்த வீட்டை பிரார்த்தனை அரங்கமாக மாற்ற விரும்பினால், மனுதாரர் மாவட்ட கலெக்டரை அணுகவேண்டும். அதேநேரம், மனுதாரர் எந்த அனுமதியையும் பெறாமல், மீண்டும் இந்த வீட்டை பிரார்த்தனை அரங்கமாக பயன்படுத்த முயற்சித்தால், சட்டப்படி தகுந்த நடவடிக்கையை மாவட்ட கலெக்டர் எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்