சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பது துரதிருஷ்டவசமானது: ஐகோர்ட்டு கடும் கண்டனம்

இரு தரப்பினர் தேசியக்கொடி ஏற்றுவதற்கு சண்டை போட்டால், அது அந்த தேச தலைவர்களை அவமானப்படுத்துவதாக அமைந்து விடும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-15 11:42 IST

சென்னை ஐகோர்ட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.பெரியசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கிருஷ்ணகிரி மாவட்டம், ஷெண்ரபள்ளி கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர்களின் சங்கத்தின் சார்பில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றுவதற்கு தனி இடம் ஒதுக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்த கிருஷ்ணகிரி தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ், ‘தேசியக்கொடி ஏற்றுவதில் என்ன பிரச்சினை இருக்கு? இப்படி சண்டை போடுவது இந்த நாட்டையும், இந்த நாட்டின் தேசியக்கொடியையும் அவமானப்படுத்துவதாக அமைந்து விடாதா? இதுபோல ஒவ்வொரு ஊரிலும் பிரச்சினை ஏற்பட்டால், தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த தனி அறையே கட்டி வைக்கவேண்டும்'' என்று கருத்து தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

சுதந்திர தினத்தன்று ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் தேசியக்கொடி ஏற்றுவதை மற்றொரு தரப்பினர் தடுத்துள்ளனர். உண்மையில் இது மிகப்பெரிய துரதிருஷ்டவசமானது ஆகும்.

கடந்த குடியரசு தினத்தன்றும் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் போலீசாரும், தாசில்தாரும் தலையிட்டு, பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளனர். இதனால் சுதந்திர தினத்தன்று (அதாவது இன்று) தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி அமைதியாக நடைபெற வேண்டும் என்பதற்காக மனுதாரர் இப்படி ஒரு மனுவை கொடுத்து உள்ளார்.

அதை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை என்பதால், இந்த ஐகோர்ட்டை அணுகியுள்ளார். கிருஷ்ணகிரி தாசில்தார் இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுதந்திரதினத்தன்று தேசியக்கொடி ஏற்றுவதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் இந்த தேசத்தின் விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த எண்ணற்ற தலைவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சுதந்திரத்தன்று தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. இரு தரப்பினர்களும் தேசியக்கொடி ஏற்றுவதற்கு சண்டை போட்டால், அது அந்த தேச தலைவர்களை அவமானப்படுத்துவதாக அமைந்து விடும். அதனால், இரு தரப்பினரும் தேசியக்கொடியின் கீழ் நின்று சண்டை போடக்கூடாது என்று இந்த ஐகோர்ட்டு எதிர்பார்க்கிறது. இருதரப்பினர்களுக்கும் நல்ல எண்ணம் மேலோங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்