குவாரி உரிமையாளர்கள் 'பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கிறார்கள்' - ஐகோர்ட்டு வேதனை
பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காப்பாற்றத்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது என்று ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார்.;
கோப்புப்படம்
கோவை மாவட்டம் புரவிபாளையத்தில் உள்ள ஒரு குவாரியில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுத்ததாக கூறி அந்த குவாரியை நடத்தி வந்த செந்தாமரை என்பவருக்கு 32 கோடியே 29 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை உதவி ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் உதவி ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ததுடன் அபராத தொகையை 32 கோடியிலிருந்து 2 கோடியே 48 லட்சம் ரூபாயாக குறைத்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கை இயற்கை வளங்கள் துறையின் கூடுதல் செயலாளர் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, அபராத தொகையை குறைத்த சுரங்கத்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ததுடன் உதவி ஆட்சியர் விதித்த 32 கோடி அபராதத்தை உறுதி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து குவாரியை நடத்தி வந்த செந்தாமரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி உரிமம் இல்லாமல் கற்களும், மண்ணும் எடுத்த குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில் சட்ட பிரிவுகள் உள்ளது. அதனால் இது சம்பந்தப்பட்ட கோர்ட்டில் செந்தாமரைக்கு எதிராக புகார் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சட்ட விரோதமாக எடுக்கப்பட்ட கனிம வளத்துக்கு இணையான தொகையை வசூலிப்பதில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது என்பதினால் 100 சதவீதம் அபராத தொகை விதித்த கோவை உதவி ஆட்சியரின் உத்தரவை உறுதி செய்தும், மொத்த அபராத தொகையை செந்தாமரையிடமிருந்து வசூலிக்கவும் அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காப்பாற்றத்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது என்று குறிப்பிட்ட நீதிபதி, இந்த பேராசைக்காரர்களான குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிப்பதாக வேதனை தெரிவித்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் அபராத தொகையை குறைத்ததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஆணையரின் உத்தரவை ரத்து செய்த இயற்கை வளங்கள் துறையின் கூடுதல் செயலாளருக்கு பாராட்டு தெரிவித்தார்.
மேலும் இந்த குவாரி மோசடியில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை அவர்களுக்கு என்ன பங்கு உள்ளது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி அவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.