ரெயில்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் - அன்புமணி ராமதாஸ்
ரெயில் கட்டணம் நாளை முதல் உயர்த்தப்படவுள்ளதாக ரெயில்வே அறிவித்துள்ளது.;
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
"இந்தியா முழுவதும் நாளை முதல் தொடர்வண்டிக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புறநகர் தொடர்வண்டிகளிலும், சாதாரண தொடர்வண்டிகளில் 500 கி.மீ வரையிலும் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில், விரைவு வண்டிகளில் சாதாரண வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா வீதமும், குளிரூட்டி வசதி கொண்ட தொடர்வண்டிகளில் கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்குள் அதிகபட்ச பயணதூரமான சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு சாதாரண தொடர்வண்டிகளில் பயணம் செய்ய 5 ரூபாயும், விரைவு வண்டிகளின் சாதாரண வகுப்புகளில் பயணிக்க 8 ரூபாயும், குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்க 15 ரூபாயும் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஒப்பீட்டளவில் இந்தக் கட்டண உயர்வு பெரிதல்ல. ஆனாலும் இந்த சுமை கூட மக்கள் மீது சுமத்தப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
மேலும் இந்தக் கட்டண உயர்வின் மூலம் தொடர்வண்டித்துறைக்கு கிடைக்கும் கூடுதல் வருமானமான ரூ.1,100 கோடி என்பது, நடப்பாண்டில் பயணியர் போக்குவரத்தின் மூலம் கிடைக்கும் மொத்த வருமானமான ரூ. 92,800 கோடியில் 1.18% மட்டும் தான். இதை வேறு ஆதாரங்களின் மூலம் மக்களுக்கு பாதிப்பில்லாமல் திரட்ட முடியும். எனவே, தொடர்வண்டிக் கட்டண உயர்வை ரயில்வே வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.