உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாக தனது 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகர் கைது
கன்னியாகுமரியில் குழந்தைகளின் உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி கொடூரமாக தாக்கிய மதபோதகரை போலீசார் கைது செய்தனர்.;
கோப்புப்படம்
கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி (45 வயது). மதபோதகராக உள்ளார். இவருடைய மனைவி சஜினி. இவர்களுக்கு 6, 3 வயதில் 2 மகன்களும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
நேற்று கிங்ஸ்லியும், அவரது மனைவியும் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது அவருடைய குழந்தைகள் பக்கத்து வீட்டிற்கு சென்று விளையாடி கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிங்ஸ்லி, 3 குழந்தைகளையும் கயிற்றால் சரமாரியாக அடித்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர்கள் அளித்த தகவல்பேரில், கருங்கல் போலீசார் அங்கு வந்து 3 குழந்தைகளையும் மீட்டனர்.
விசாரணையில் கிங்ஸ்லி போலீசாரிடம் கூறியதாவது, தினமும் ஊழியத்துக்கு செல்லும்போது குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் தான் வீட்டுக்கு வந்தபோது குழந்தைகளை காணவில்லை. அவர்கள் பக்கத்து வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். எனவே அவர்களின் உடம்பில் சாத்தான் புகுந்து விட்டதாக கருதி அவர்கள் உடம்பில் இருந்து சாத்தானை விரட்ட கயிற்றினால் கட்டி வைத்து அடித்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 3 குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து காப்பகத்தில் சோ்த்தனர்.